வரக் கூடிய புயலுக்கு புதிய பெயர் என்ன தெரியுமா? புரெவி!
வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது வலுப்பெற்று, புயலாக மாற வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்தப் புயலுக்கு, 'புரெவி' என, பெயரிடப்பட உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தென்கிழக்கு வங்கக் கடலில், நாளைக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த பகுதி, மேலும் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர், அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்த மண்டலம், வரும், 2ம் தேதி தமிழகம், புதுச்சேரியை நெருங்கும். இதன் காரணமாக, டிச., 1, 2, 3ல், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யும்.தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும், வங்கக் கடலின் தெற்கு, தென்கிழக்கு, மத்திய தென் கிழக்கு, குமரிகடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளிலும், நாளை முதல், டிச., 3 வரை, சூறாவளி காற்று மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் வீசும்; கடல் அலைகள் கொந்தளிப்பாக காணப்படும்.இவ்வாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து, புயலாக மாறினால், அதற்கு, மாலத்தீவு அளித்துள்ள, 'புரெவி' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. புரெவி என்றால், மாலத்தீவின் தேசிய மொழியான திவேஹியில், 'கறுப்பு சதுப்பு நிலங்கள்' என, பொருள்.
Tags: தமிழக செய்திகள்