Breaking News

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தால் சட்ட ஒழுங்கு பாதிப்பு இல்லை :தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில்

அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பில்லை எனவும், போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர காவல்துறை சார்பில் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் ஆதரித்தும் நடைபெறும் போராட்டங்களால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், காவல்துறை அனுமதியில்லாமல் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும்  இன்று  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.


மேலும் தமிழகத்தில் 49 இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் மட்டும் குடியுரிமை திருத்த சட்ட போராட்டம் தொடர்பாக 29 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கோ, பொது மக்களுக்கோ போக்குவரத்துக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவாதகவும், போராட்டத்தை ஒருங்கிணைக்கும் தலைவர்களோடு காவல்துறை சார்பில் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாவும் கூறினார்

மேலும் மனுதாரர்கள் தரப்பு வாதம் முடிவடையாததால் வழக்கு விசாரணை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback