விதிகளை மீறி பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை - சென்னை மாநகராட்சி நோட்டீசுக்கு ஐகோர்ட் தடை
அட்மின் மீடியா
0
அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என டிஜிட்டல் பேனர் அச்சகத்துக்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணமடைந்ததை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி டிஜிட்டல் பேனர் அச்சகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், அனுமதி இல்லாமல் டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என டிஜிட்டல் பேனர் தயாரிப்பு நிறுவனம்
சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
டிஜிட்டல் பேனர்கள் தயாரிப்பது குற்றமல்ல. சட்டவிரோதமாக வைப்பது தான் குற்றம் என்று தெரிவித்த நீதிபதிகள், அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை என அச்சகங்களுக்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்