Breaking News

டிக் டாக் மோகம் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை செய்த இளம் பெண்

அட்மின் மீடியா
0
டிக் டாக் மோகம் லைவ் வீடியோ வெளியிட்டு இளம்பெண் தற்கொலை


டிக் டாக் பலரது நேரத்தையும், பலரது வாழ்க்கையையும் பாதிக்கிறது.


டப்ஸ்மாஷின் அடுத்த வடிவமாக சினிமா பாடல்கள் வசனங்களுக்கு வாயசைத்து, நடித்து, ஆடிப்பாடி அதனை வீடியோவாக வெளியிடும் வசதியை டிக் டாக் செயலி செய்து தருகிறது.


இதில் காணொலி பதிவு செய்பவர்கள் அதிலேயே ஒருவித மயக்கத்தில் ஆழ்ந்து அனைத்துப் பணிகளையும் புறக்கணிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.


பெரும்பாலும் திருமணமான மத்தியதர வயதைக் கடந்த பெண்கள் சினிமா பாடல்களுக்கு கதாநாயகி போல் தங்களைப் பாவித்து நடனம், வாயசைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு நேரத்தைச் செலவழிக்கின்றனர்.


தற்போது எல்லாவற்றையும் தாண்டி குழுக்களாகச் செயல்படுகின்றனர்.
இவ்வாறு பதிவிடும் காட்சிகள் ஆபாசத்தின் எல்லையைக் கடக்கும்போது, குடும்பத்தார் உறவினர் மத்தியில் சம்பந்தப்பட்டவர்களின் கணவரோ, மனைவியோ அவமானப்படும் நிலை உருவாகிறது.


இதனால் குடும்பத்துக்குள் சண்டை சச்சரவு ஏற்படும் நிலை உருவாகிறது.
இவ்வாறு பல நிகழ்வுகள் சமீபகாலமாக நடந்து அது கொலையிலும் முடிந்துள்ளது.
தற்போது மேலும் ஒரு சம்பவம் அரியலூரில் நடந்துள்ளது.


அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேலு (30). இவரது மனைவி அனிதா (24). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
பழனிவேலு சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அனிதா கணவர் ஊரான சீராநத்தத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

ஆரம்பத்தில் கணவர் சிங்கப்பூரில் சம்பாதித்து அனுப்பும் பணத்தில் சந்தோஷத்துடன் குடும்பம் நடத்தி குழந்தைகளைக் கவனித்து வந்த அனிதாவின் வாழ்க்கையை, கணவர் ஊரிலிருந்து அனுப்பி வைத்த ஐபோன் மாற்றியது.

தனது ஐபோனில் டிக் டாக்கைப் பதிவிறக்கம் செய்த அனிதா அதில் ஆரம்பத்தில் தனது காணொலிகளைப் பதிவு செய்ய அதற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து பின்னர் அதிலேயே மூழ்கினார்.


குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளான உணவு, கல்வி, அவர்களைப் பராமரிப்பது போன்ற செயல்களிலிருந்து அவரது கவனம் திசை திரும்பியது.


டிக் டாக்கில் பழக்கமான நண்பர்களுடன் இணைந்து பதிவும் போட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த அனிதாவின் மகன் கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை மருத்துவரிடமும் அழைத்துச் செல்லாமல் சரியாக கவனிக்கவும் செய்யாமல் இருந்துள்ளார். இதுகுறித்து அவரது உறவினர்கள் மூலம் சிங்கப்பூரில் உள்ள கணவருக்குத் தெரியவந்துள்ளது.


தகவல் அறிந்து கடுமையாக ஆத்திரமடைந்த கணவர் பழனிவேலு, அனிதாவை போனில் அழைத்து திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.


நேற்று முன் தினம் அதையும் டிக் டாக்கில் பதிவு செய்ய எண்ணி தனது கடைசி விருப்பமாக தன்னுடைய நிலையை அழுதபடி கூறி அதை டிக் டாக் செயலி மூலம் காணொலியாகப் பதிவு செய்தார்.


பின்னர் திடீரென பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். இவை அனைத்தும் டிக் டாக் காணொலியில் பதிவு செய்துள்ளார். பூச்சி மருந்து குடித்ததால் மயங்கும் நிலைக்கு வர அதுவரை டிக் டாக்கில் பதிவு செய்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார்.அனிதா மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு அவர் உடல் நிலை மோசமடையவே மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Share this