இனி ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் அறிவிப்பு! தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு!
ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 'திறந்த குறைதீர்ப்பு நாள்' நடத்தி மக்களின் குறைகளைக் கேட்குமாறு அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் IPS அறிவுறுத்தியுள்ளார். Public Grievance Redressal Day to be declared on every Wednesday and Saturday from now on! Tamil Nadu DGP Mahesh Kumar Agarwal orders!
தமிழ்நாடு காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி
மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்துக் காவல் அலுவலகங்களிலும் ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை (2 மணி நேரம்) பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் (Open Grievance Day) நடத்தப்படும்.
பொதுமக்கள் தங்களின் அவசரப் புகார்களுக்கு எப்போது வேண்டுமானாலும் காவல் நிலையங்களை அணுகலாம் என்ற தற்போதைய நடைமுறை வழக்கம்போலத் தொடரும். அதே நேரத்தில், தங்களின் நீண்ட நாள் தீர்க்கப்படாத பிரச்சினைகள், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச விரும்பும் எளிய மக்களுக்காக இந்த சிறப்பு 2 மணி நேரம் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகள் வழக்கு விசாரணை, நீதிமன்றப் பணிகள், அவசரக் கூட்டங்கள் அல்லது சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு பணிகளுக்குச் சென்றுவிடுவதால், கிராமங்களில் இருந்து வரும் ஏழை மக்கள் அவர்களைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புவதைத் தடுக்கவே இந்த அட்டவணை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த குறைதீர்ப்பு நேரத்தில் கீழே உள்ள அனைத்து நிலை அதிகாரிகளும் தங்களது இருக்கையில் கட்டாயம் இருக்க வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்:
காவல் நிலைய அதிகாரிகள் (Inspectors)காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள் (DSP)மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (SP)காவல்துறை துணைத் தலைவர்கள் (DIG)காவல்துறை தலைவர்கள் (IG)மாநகர காவல் ஆணையர்கள் (Commissioners of Police)ஒருவேளை மாவட்ட எஸ்பியோ அல்லது காவல் நிலைய இன்ஸ்பெக்டரோ தவிர்க்க முடியாத மிக அவசரப் பணி நிமித்தமாகவோ அல்லது நீதிமன்றக் கடமைகளின் காரணமாகவோ வெளியில் செல்ல நேரிட்டால், அந்தத் தடையிலும் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என டிஜிபி எச்சரித்துள்ளார்.
அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க முடியாத அவசரச் சூழலில், தங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள தகுதியான அதிகாரியைப் பொதுமக்கள் குறைதீர்ப்புப் பணிக்காகப் பொறுப்பில் அமர்த்திவிட்டுச் செல்ல வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் பொதுமக்கள் மனுக்களைக் கொடுக்க வந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பக் கூடாது.மனுக்களைப் பெறுவதோடு மட்டுமின்றி, காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மிகவும் கண்ணியமாகவும், கனிவாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், பெறப்படும் ஒவ்வொரு மனுவின் மீதும் ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும்.
இந்த பொதுமக்கள் குறைதீர்ப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட வாரியாக அதிகாரிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள், அவர்களின் வருகைப் பதிவு மற்றும் புகார்களின் மீதான எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகிய அனைத்தும் சென்னை தலைமை காவல்துறை தலைமையகம் (Police Headquarters) மூலம் நேரடியாகவும், ரகசியமாகவும் கண்காணிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
