ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன முழு விவரம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய், தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்த இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய விஜய்,
மலேசியாவுடனான தனது நெருக்கத்தை வெளிப்படுத்தினார். "இலங்கைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் தமிழ் மக்கள் வசிக்கும் ஒரு பகுதி என்றால் அது மலேசியாதான். இங்குள்ள உங்களின் அன்பு எனக்கு எப்போதும் ஸ்பெஷல். முருகன் கோயில்களுக்கு காவடி எடுத்து செல்லும் மலாய் மக்களும், சரளமாக தமிழ் பேசும் சீன மக்களும் மலேசியாவில் தமிழ் கலாச்சாரம் எவ்வளவு ஆழமாக மதிக்கப்படுகிறது, பாதுகாக்கப்படுகிறது மற்றும் பரவலாக பரப்பப்படுகிறது என்பதை காட்டுகிறது.
தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து பரப்பியதற்காகவும், தமிழ் சினிமாவுக்கு அளிக்கப்படும் மகத்தான ஆதரவிற்காகவும் மலேசிய தமிழ் மக்களுக்கு நன்றி. மலேசியா எப்போதும் ஒரு முக்கியமான சந்தை மற்றும் படப்பிடிப்பு இடமாக இருந்து வருகிறது. பில்லா, குருவி போன்ற படங்கள் இங்கு எடுக்கப்பட்டன.
நான் சினிமாவுக்கு வரும்போது ஒரு சிறிய மணல் வீடு கட்டினாலே போதும் என்று தான் ஆசைப்பட்டேன். ஆனால், என் ரசிகர்கள் எனக்காக ஒரு பெரிய கோட்டையையே கட்டி கொடுத்துவிட்டார்கள். கடந்த 33 ஆண்டுகளாக ரசிகர்கள் எனக்காக எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார்கள். என் வளர்ச்சியிலும், வெற்றியிலும் அவர்களின் பங்கு மிகப்பெரியது. இந்த 33 வருடங்களாக அவர்கள் எனக்கு கொடுத்த அன்பையும், ஆதரவையும், அடுத்த 33 வருடங்களுக்கு நான் அவர்களுக்கு திருப்பி கொடுக்க போகிறேன்.
எனக்கு ஏதாவது ஒன்று என்றால் ரசிகர்கள் தியேட்டர் வாசலில் வந்து நிற்கிறார்கள். நாளை அவர்களுக்கு ஒன்று என்றால், நான் அவர்கள் வீட்டு வாசலில் போய் நிற்பேன். எனக்காக தங்கள் நேரத்தையும், உழைப்பையும், அனைத்தையும் விட்டு கொடுத்த ரசிகர்களுக்காக, நான் எனக்கு மிகவும் பிடித்த சினிமாவை விட்டு கொடுக்கிறேன். இது அவர்களுக்கு நான் செய்யும் கைமாறு மட்டுமல்ல, நான் தீர்க்க வேண்டிய நன்றிக்கடன். வெறும் நன்றி என்று வார்த்தைகளால் மட்டும் சொல்லிவிட்டு நான் கடந்து செல்ல விரும்பவில்லை. அந்த நன்றிக்கடனை செயலில் தீர்த்துவிட்டுத்தான் போவேன்.
மேலும் வாழ்க்கையில் ஜெயிக்க நண்பர்கள் மட்டும் இருந்தால் போதாது; ஒரு வலுவான எதிரி தேவை. அப்போதுதான் நாம் நம்மை மேலும் வலிமைப்படுத்தி கொள்ள முடியும். சும்மா வருகிறவர்கள், போகிறவர்களை எல்லாம் எதிர்த்து கொண்டிருக்க முடியாது.
ஒரு வலுவான எதிரியை எதிர்கொள்ளும் போது தான் நீங்களும் வலிமையானவராக மாறுவீர்கள். விஜய் தனியா வருவாரா, அணியா வருவாரான்னு ஒரு பேச்சு போயிட்டு இருக்கு. நாம எப்போ தனியா இருந்திருக்கோம்? கடந்த 33 வருஷமா நான் மக்களோடுதானே இருக்கேன். மக்கள் தான் என் அணி, அவர்களோடு இருப்பதுதானே மிகப்பெரிய கூட்டணி" என்று பேசினார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்



