வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் சின்னம் - எங்கெல்லாம் மழை பெய்யும் முழு விவரம்
வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் சின்னம் - எங்கெல்லாம் மழை பெய்யும் முழு விவரம்
ஆந்திரா - ஒடிசா கடற்கரையிலிருந்து வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
வங்கக் கடலில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா இடையே இன்று (ஆக.17) குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்றும், இந்தப் புயல் சின்னம் வரும் 19 ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு நிலவி வருகிறது.இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) முதல் ஆக. 23 வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது. இதைத் தொடர்ந்து நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
-இன்று (17-08-2025) காலை 0830 மணி அளவில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வருகின்ற 19 ஆம் தேதி மாலையில் தெற்கு ஒரிசா - வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை கடக்கக்கூடும்.
17-08-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
19-08-2025 முதல் 23-08-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Tags: தமிழக செய்திகள்