கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் என பரவும் செய்தி - உண்மை என்ன முழு விவரம்
கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் எனப் பரவும் செய்தி - உண்மை என்ன முழு விவரம்
சென்னை மாவட்டத்தின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டைப் பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி. அனுராக் தாகூர் உள்ளிட்டோர் எக்ஸ் தளத்தில் பதிவு செய்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை விமர்சித்துள்ளனர்.
கொளத்தூர் தொகுதியில், 84-வது வாக்குச்சாவடியில் உள்ள வீட்டு எண் 11-ல் 30 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் ஒரே பெயரில் (ரபியுல்லா) மூன்று வாக்காளர் அட்டைகள் உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் (TNFactCheck) விளக்கம் அளித்துள்ளது.
அவென்யூ எண் 11 என்பது ஒரு தனி வீடு அல்ல, மாறாகப் பல குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் குடியிருப்பில் வெவ்வேறு வீடுகளில் வசிக்கும் 30 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், இது வாக்காளர் பட்டியலில் வழக்கமான நடைமுறையாகும். மேலும், ஒரே பெயரில் மூன்று வாக்காளர் அட்டைகள் இருப்பது தவறான தகவல் எனவும், வாக்காளர் பட்டியலில் அத்தகைய முரண்பாடு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதில், ரபி என்பவரின் பெயர் வரிசை எண் 50லும், 52ல் கணவர் என்கிற இடத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும், வரிசை எண் 348, 352 ஆகியவற்றில் தந்தை என்கிற இடத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், காணொளியில் குறிப்பிட்டதுபோல் ரபி என்ற பெயரில் 3 வாக்காளர்கள் இல்லை. மேலும், வாக்குச்சாவடி எண் 157ல் (வேறு பகுதி) ரபியுல்லா பெயர் தந்தை, கணவர் என்ற இடங்களில் வருகிறது.
11 எண் கொண்ட குடியிருப்பில் இஸ்லாமியர்கள் மட்டுமே வசிப்பது போன்ற தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். அங்கு அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். வதந்தியைப் பரப்பாதீர் என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Tags: FACT CHECK மறுப்பு செய்தி