பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணி நீக்கம் - ராமதாஸ் அறிவிப்பு
பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் - ராமதாஸ் அறிவிப்பு
பா.ம.க.வில் தலைமை நிர்வாக குழு செயல்பட்டு வந்தது. இந்த குழுவில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன், வடிவேல் ராவணன் உள்ளிட்டவர்கள் தலைமை நிர்வாகிகளாக இடம்பெற்று இருந்தனர்.
இந்த சூழலில் பா.ம.க.வில் தற்போது நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் கருத்து மோதல் போக்கு காரணமாக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை நிர்வாக குழுவை அதிரடியாக கலைத்தார்
21 புதிய தலைமை நிர்வாக குழு நிர்வாகிகளாக, பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், கவுரவ தலைவர் ஜி. கே.மணி, பு.தா.அருள்மொழி, கரூர் பாஸ்கரன், ஏ.கே. மூர்த்தி, அருள் எம்.எல்.ஏ., ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகளை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்து அறிவித்தார்.
இதையடுத்து, புதிய தலைமை நிர்வாக குழு நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது.
இதில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில், ஆகஸ்டு 10-ந்தேதி பூம்புகாரில் நடைபெறும் மகளிர் மாநாடு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதனிடையே கூட்டம் முடிந்து வெளியே வந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா. அருள்மொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "இன்று (அதாவது நேற்று) நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் 8-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) பா.ம.க. மாநில செயற்குழு கூட்டம் ஓமந்தூரில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகிற ஆகஸ்டு 10-ந்தேதி பூம்புகாரில் நடைபெற உள்ள மகளிர் மாநாடு பணிகள் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம், அவர்களது செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் ஒருமித்தமாக டாக்டர் ராமதாஸ் கரத்தை பலப்படுத்துவது என ஒற்றை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இப்போதைய சூழலில் தேர்தல் கமிஷனுக்கு செல்ல வேண்டிய நிலை இல்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் டாக்டர் அன்புமணியிடம் உள்ளதால் கொறடாவை மாற்ற கோரி மனு அளித்து இருக்கிறார்கள். கொறடா அவர்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது" என்றார்.
Tags: தமிழக செய்திகள்