கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சை கருத்து பாஜக அமைச்சர் மன்னிப்பு!
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்கள் குறித்து அதிகாரப்பூர்வ செய்தியாளர்கள் சந்திப்பில் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகிய நிலையில், இந்திய ராணுவ கர்ணல் சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என்று குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழிந்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைந்தார் மோடி எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்" என்று பேசினார்.
இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என்று பாஜக அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தனது சர்ச்சை பேச்சுக்கு பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் பேசியதை சிலர் தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள். பஹல்காம் தாக்குதலால் தானும் தனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளானோம். எனது குடும்பம் இராணுவ பின்னணியைக் கொண்டுள்ளது.
நான் சோகமான இதயத்துடன் பேசியபோது, சில ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நான் கூறியிருந்தால், 10 முறை மன்னிப்பு கேட்க நான் தயாராக இருக்கிறேன். மதத்தை தாண்டி நாட்டிற்கு சேவை செய்த சோபியா சகோதரியை என்னுடன் பிறந்த சகோதரியை விட அதிகமாக மதிக்கிறேன். இராணுவத்தையும் சோபியா சகோதரியையும் நான் வணங்குகிறேன்" என்று தெரிவித்தார்.
Tags: இந்திய செய்திகள்