மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற காரைக்குடி வாலிபர்கள் கடத்தல் ரூ.26 லட்சம் கேட்டு மிரட்டல் - நடந்தது என்ன முழு விவரம்
மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற காரைக்குடி வாலிபர்கள் கடத்தல் ரூ.26 லட்சம் கேட்டு மிரட்டல் நடந்தது என்ன முழு விவரம்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி போலீஸ் காலனி கைலாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராம்ஷா. இவரது மகன் நூர்முகமது இஸ்மாயில். இவரும், உறவினர் முகமது தாரிக்கும் கடந்த பிப். 13ம் தேதி சென்னையில் இருந்து மலேசியா பினாங்கிற்கு சுற்றுலா விசாவில் சென்றுள்ளனர்.
இதற்கிடையே ரியாசுதீன் ரூ.26 லட்சம் பணம் தங்களுக்குத் தர வேண்டும் என கூறி, அறிமுகம் இல்லாத நபர்கள் நூர்முகமது இஸ்மாயில், முகமது தாரிக் ஆகியோரை கடத்திச் சென்றுள்ளனர்.ரூ.26 லட்சம் பணம் கொடுத்தால் தான் விடுவிக்கமுடியும் என்றும், பணம் தரவில்லை என்றால் இருவரையும் கொன்று விடுவதாகவும், உடலில் உள்ள கிட்னி உள்ளிட்ட பாகங்களை எடுத்து விற்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இருவரின் பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டு அடித்து கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவரது பெற்றோர், சிவகங்கையில் கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் மனு அளித்து மகனை மீட்டு தரும்படி கோரிக்கை அளித்துள்ளனர்.
இதுகுறித்து கடத்தப்பட்ட நூர்முகமதுவின் சகோதரி மர்லின் பானு கூறுகையில்,
எனது தம்பி நூர்முகமது இஸ்மாயில், உறவினர் முகமது தாரிக் இருவரும் சுற்றுலாவாக மலேசியா சென்றனர். சில நாட்களுக்கு முன்னர் போன் வந்தது.அதில் மர்மநபர்கள் இவர்களை கடத்தி வைத்துள்ளதாக தெரிவித்தனர். எதற்காக கடத்தி வைத்துள்ளீர்கள் என கேட்டபோது ரூ.26 லட்சம் பணம் தர வேண்டும் என டிமாண்ட் செய்தனர். பணம் கொடுத்தால் தான் விடுவோம். இல்லாவிட்டால் கொன்று விடுவோம் என மிரட்டுகின்றனர். அவ்வளவு பணம் கொடுக்கும் வகையில் எங்களிடம் வசதியில்லை. பணம் கொடுக்காவிட்டால் உடல் பாகங்களை எடுத்து விற்பனை செய்வோம். முதலில் கிட்னியை எடுத்து விற்றுவிடுவோம் என கூறினர்.
சகோதரர் மற்றும் உறவினரை அடித்து கொடுமைப்படுத்துகின்றனர். குணா என்பவர் எங்களிடம் பேசினார். அவர்தான் கடத்தி வைத்துள்ளது போல் தகவல் வந்தது. இவர்களை மீட்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்களை மீட்டுத் தரவேண்டும். இதுபோல் சுற்றுலா செல்வோரை கடத்தி பணம் கேட்டு மிரட்டுவது தொடர்கிறது. இதுபோன்று இனிமேல் நடக்ககூடாது. எனவே முதல்வர், பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்