இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் - தேர்தல் ஆணையம்
இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் - தேர்தல் ஆணையம்
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் காலத்தில் பெறப்பட்ட 23.09 லட்சம் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை பணிகள் முடிந்த நிலையில், நாளை ( ஜன.6) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது
கடந்த ஆண்டு ஆக.20 முதல் அக்.18-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.
அதன் பிறகு, அக்.29-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்றிலிருந்து சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் நவ.28-ம் தேதி வரை பெறப்பட்டது.r
மேலும் நவ. 16, 17 மற்றும் 23, 24 ஆகிய நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள 69 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதுதவிர, தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பதிவு அதிகாரிகளிடம் நேரிலும், ஆன்லைன் மூலமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த விண்ணப்பங்களின் பரிசீலனை கடந்த ஆண்டு நவ.29 முதல் தொடங்கப்பட்டு, டிச 24-ம் தேதி வரை பரிசீலிக்கப்பட்டது. இதையடுத்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தொடங்கின.
இதன்படி நாளை ( ஜன.6 ) தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர்கள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடுவார்கள்.
சென்னையில், சென்னை மாநகராட்சி ஆணையர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவார். அதன்பின் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
