மலேசியாவில் முதன்முறையாக நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி முழு விவரம்
மலேசியாவில் முதன்முறையாக நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி முழு விவரம்
மலேசியாவில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
தமிழர்களுடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.முதல் முறையாக மலேசியாவில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக இன்று இலங்கை முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான், நடிகர் பிரசாந்த், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குழுத் தலைவர் ஒண்டி ராஜா ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் இந்தப் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.மலேசியாவில் நடைபெறும் இப் போட்டி மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று டத்தோஸ்ரீ சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசியா நாட்டில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம், சென்னை வடபழனியில் நடைபெற்றது. இது குறித்து மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசியாவின் முன்னாள் அமைச்சருமான சரவணன், இலங்கை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில தலைவர் ஒன்டியராஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய மலேசியா எம்.பி.சரவணன், மலேசிய ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தின் 28 மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு நடத்தக்கூடிய பிரதிநிதிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன
தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா நாட்டில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஜல்லிக்கட்டு மிகப்பெரிய விழாவாக மலேசியா மண்ணில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் மலேசியாவில் எந்த இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது? என்னென்ன வசதிகள் தேவை என்பன குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்க, தமிழகத்திலிருந்து போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் மலேசியா வர உள்ளனர் என அவர் தெரிவித்தார். இது குறித்து ஞாயிறன்று முதலமைச்சரை சந்தித்து பேச இருப்பதாகவும தமிழ்நாட்டை தாண்டி ஜல்லிக்கட்டை கொண்டு செல்லும் போது தமிழக அரசு உதவி செய்யும் என்றும் சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்
Tags: வெளிநாட்டு செய்திகள்
