பெற்றோர்களை பராமரிக்காவிட்டால் சொத்துகளை ரத்து செய்யலாம்... உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
மத்தியப் பிரதேசத்தில் வசித்து வரும் வயதான பெண் தன்னை கவனித்துக் கொள்ளாத மகனிடமிருந்து தான் வழங்கிய சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், வயதான பெற்றோரைப் பிள்ளைகள் கவனிக்கவில்லை என்பதற்காகத் தான பத்திரத்தை ரத்து செய்ய முடியாது என கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு
மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் சட்டத்தின்படி மட்டுமே ஆராய்ந்து தீர்ப்பு கொடுத்துள்ளது. ஆனால், மூத்த குடிமக்களின் உணர்வுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும் தற்போது உருவாகியுள்ளது.
சொத்துகளை எழுதிக் கொடுத்த பிறகு பெற்றோரைப் பிள்ளைகள் கவனிக்காவிட்டால் அவர்களுக்குப் பெற்றோர் எழுதிக் கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்து விடலாம்.
சொத்துகளை எழுதி வைத்தவருக்குத் தேவையான அடிப்படை வசதிகள், உடல்ரீதியான தேவைகளைச் சொத்துகளைப் பெற்றவர் செய்ய வேண்டும். அப்படி செய்யத் தவறினால், சொத்துகளை எழுதிக் கொடுத்தது செல்லாது என அறிவிக்க முடியும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
Tags: இந்திய செய்திகள்
