Breaking News

தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான விவகாரம் 3 பேர் கைது

அட்மின் மீடியா
0

தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான விவகாரம் 3 பேர் கைது 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சென்மேரிஸ் பள்ளியில் எல்கேஜி படிக்கும் குழந்தை பள்ளி கழிவு தொட்டியில் விழுந்து இறந்த வழக்கில் பள்ளி தாளாளர் உள்ளிட 3 பேர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சென்மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று கழிவறைக்குச் சென்ற எல்கேஜி மாணவி கழிப்பிட தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். 

இது தொடர்பாக அவரின் பெற்றோர் பழனிவேல், சந்தேக மரணம் என விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி காவல் நிலைய காவல்துறையினர் சந்தேகம் மரணம், பணியில் அஜாகரத்தையாக இருப்பது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ், மூவரையும் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும் பள்ளிகளின் உட்கட்டமைப்பை கண்காணித்து ஆலோசனை வழங்கிடவும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை ஜனவரி 10ஆம் தேதி திருச்சியில் கூட்டுகிறது

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த அன்புக்குழந்தை, செல்லக்குழந்தை லியா லட்சுமியின் மறைவுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டாவது பெற்றோராக பள்ளி செயல்பட்டு பாதுகாக்க வேண்டியது கடமை. எத்தனையோ கனவுகளை,லட்சியங்களைகொண்டுள்ள அன்புக் குழந்தை லியாலட்சுமியின் பெற்றோரை என்ன வார்த்தை சொல்லி ஆற்றுப்படுத்துவது என்பது தெரியாது தவிக்கிறோம்.இனிவரும் காலங்களில் தனியார் பள்ளிகள் தங்கள் உட்கட்டமைப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் வாகனங்களில் குழந்தைகள் ஏறும்போதும் இறங்கும்போதும் உதவியாளர்கள் பக்க பலமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், நம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறு துன்பம் கூட ஏற்படாத அளவிற்கு தாயின் கருணையோடும் தந்தையின் அக்கறையோடும் பள்ளி நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் என்றும் பள்ளித் தாளாளர்களை தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளை ஓர் உயர்மட்டக் குழு அமைத்து பள்ளிகளின் பாதுகாப்பு ஏற்பாட்டை கண்காணித்து பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கி குறைகள் இருந்தால் உடனே அதைக் களைய நடவடிக்கை எடுப்பதே குழுவின் நோக்கம். 

பாதுகாப்பு கண்காணிப்பு குழு அமைப்பதற்கான அவசர ஆலோசனை கூட்டம் ஜனவரி 10ஆம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கிறது குழந்தையின் இழப்பு ஆற்றொனாத் துயரத்தைத் தந்த போதிலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் பாதுகாப்பது தான் தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலையாய பணி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இச்சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்று அன்போடு அரசியல் தலைவர்களை கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback