மின் கட்டண உயர்வு - வீட்டு இணைப்புக்கு பொருந்தாது தமிழக மின்வாரியம் விளக்கம்
நேரத்திற்கு ஏற்ப வெவ்வேறு மின் கட்டணம் வசூலிக்கும் வகையில் மின் நுகர்வோருக்கான விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதாவது மின்தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் 10 முதல் 20 சதவிகிதம் வரை கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் மேலும் சூரிய ஒளி கிடைக்கும் நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு 10 முதல் 20 சதவிகிதம் கட்டணத்தை குறைக்கலாம் எனவும் இந்த புதிய கட்டண நடைமுறை 2024 ஏப்ரல் 1 முதல் வணிக மற்றும் தொழில்துறைக்கு அமலாகின்றது என மத்திய அரசு அறிவித்துள்ளது
ஏப்ரல் 2024-ம் ஆண்டு முதல் 10 கிலோ வாட் மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகபட்ச தேவை கொண்ட வணிகம் மற்றும் தொழில் துறை நுகர்வோருக்கும் , 2025 ஏப்ரல் 1 முதல் விவசாய நுகர்வோர் தவிர மற்ற அனைத்து நுகர்வோருக்கும் டைம் ஆப் டே கட்டணம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் ஒரே விகிதத்தில் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிப்பதை விட, மின்சாரத்திற்கு செலுத்தும் விலை நாளின் நேரத்திற்கு ஏற்ப மாறுபடுவதே டிஓடி டைம் ஆப் டே ஆகும்
இந்த கட்டண முறையின் கீழ், சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்தும் நேரங்களில் வசூலிக்கப்படும் கட்டணம், தற்போது நாள் முழுவதும் வசூலிக்கப்படும் சாதாரண கட்டணத்தை விட 10% -20% குறைவாக இருக்கும். இந்த டிஓடி நேரம், ஒரு நாளில் 8 மணி நேரம் என்ற அளவில் மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையம் குறிப்பிடும் நேரத்தைப் பொறுத்தது. அதே நேரத்தில், மற்ற மின்சாரத்தை பயன்படுத்தும் உச்ச நேரங்களில் கட்டணம் 10 முதல் 20 சதவீதம் அதிகமாக இருக்கும். 2024 ஏப்ரல் 1 முதல் 10 கிலோவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகபட்ச தேவை கொண்ட வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு டிஓடி கட்டணம் பொருந்தும்.
தமிழக மின் துறை விளக்கம்:-
நேரத்துக்கேற்ப மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை வீடுகளுக்கு பொருந்தாது என்று என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மின் பயன்பாடு அதிகம் உள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 20% கூடுதல் கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக 2024 ஏப்ரல் முதல் தொழிற்சாலைகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் இந்த மின் கட்டண முறை அமல்ப்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி, நேரத்துக்கேற்ப மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை வீடுகளுக்கு பொருந்தாது என்றும், எனவே வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் தமிழக ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உள்ளது. எனவே தற்போதுள்ள மின் கட்டண ஆணைப்படி உச்ச நேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே இந்தத் திருத்தத்தால் தமிழகத்தில் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம் அளித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்