Breaking News

இரட்டை இலை வழக்கு- உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு - முழு விவரம்

அட்மின் மீடியா
0

 எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது - தேர்தல் ஆணையம் பதில் மனு , இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் மனுவை தள்ளுபடி செய்ய தேர்தல் ஆணையம் பதில் மனு

 


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் அதிமுக இரு அணிகளாக பிரிந்துள்ளது இதனால்  அதிமுகவில் குழப்பங்கள் நீடித்துவரும் நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு இரு அணிகள் மத்தியிலும் நிலவுகிறது.

இந்த நிலையில் கடந்த 29-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

மேலும் அதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட வேட்பு மனுவையும், பொதுக்குழு தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மூன்று நாட்களுக்குள் தேர்தல் ஆணையமும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பதில் அளிக்க கோரி பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் இடையீட்டு மனுவுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுப்பது, ஓபிஎஸ் , இபிஎஸ் வேட்பாளர்களை ஏற்பது தேர்தல் நடத்தும் அலுவலரின் முடிவுக்கு உட்பட்டது. 

அதிமுக பொதுக்குழு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த முடிவும் எடுக்கமுடியாது. ஒரு கட்சியின் உட்கட்சித் தேர்தலை கண்காணிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை இல்லை. அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கட்சிகளும் குறிப்பிட்ட இடைவெளியில் தேர்தல் நடத்தி ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்துக்கான படிவத்தில் தேர்தல் ஆணைய ஆவணப்படி அதிமுக தலைமை பதவியில் இருப்பவர்களே கையெழுத்திட முடியும்.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக வழக்கு இருந்தாலும், இரட்டை இலை சின்னம் தொடர்பாக யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார்.

இரட்டை இலை சின்னம் குறித்த எந்த வழக்கும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படவில்லை.பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளதால் கடந்த ஆண்டு ஜூலை 11 இல் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட விதி மாற்றங்கள் கருத்தில் கொள்ளவில்லை. ஒரு கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவதில்லை. 

வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, தேர்தலை கண்காணிப்பது ஆகியவையே தேர்தல் ஆணையத்தின் பணி. கையெழுத்திட அதிகாரம் உள்ளவர் என ஆவணங்களில் உள்ளவரின் கையெழுத்தையே ஏற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback