நவ.30 ஆம் தேதிதான் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் -வானிலை ஆய்வு மையம்!
தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்நிலையில்,புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது தாமதமாக நவ.30 ஆம் தேதிதான் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அவ்வாறு,உருவான பிறகு 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (28-ந்தேதி) கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது
வானிலை ஆய்வு மைய அறிக்கை
Tags: தமிழக செய்திகள்