கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கேரள எல்லையையொட்டி இருப்பதால், கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டு உள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
மேலும், மண்டல மற்றும் கோட்ட அளவில் வணிக சங்க பிரதிநிதிகளுடன் கோவை மாநகராட்சி ஆணையர், சார் ஆட்சியர் / கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. அதன்படி, தமிழக அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் பின்வரும் செயல்பாடுகளும் அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.
அதன்படி, வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் 9, 10, 11, 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
அனைத்து கல்லூரிகள் வகுப்புகள் மற்றும் அனைத்து பட்டயப்படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தவும் அனுமதி. மாவட்டத்தில் உள்ள அனைத்து மழலையர் காப்பகங்களும் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.
மேற்படி, அனுமதிக்கப்பட்ட கல்லூரிகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகள் 50 சதவீத பயிற்சி பெறுபவர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்ம்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்ட அனுமதிக்கப்படுகிறது.
தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுபான கூடங்கள் செயல்பட அனுமதி. உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் இன்று முதல் இரவு 10 மணி வரை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
கோவை மாநகராட்சி ஆணையரால் வணிகர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம் 5,6,7-வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேட சாலை(ராயல் நகர் சந்திப்பு), ரைஸ் மில் சாலை, என்.பி. இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு ஆகிய தெருக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய துணை தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் அந்த தெருக்களில் இயங்கும் பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இன்று முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள், அருங்காட்சியங்கள், பூங்காக்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தடை செய்யப்படுகிறது.
அனைத்து மால்களும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது.
பொள்ளாச்சி மாட்டு சந்தை வரும் 25ஆம் தேதி முதல் தற்காலிகமாக இயங்க தடை விதிக்கப்படுகிறது
கேரளா – தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்திற்குள் விமானம், தொடர்வண்டி, மேற்படி சோதனைச்சாவடி வழியாக வரும் பயணிகள் அனைவரும் 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் அரசின் கொரோனா தடுப்பு நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அவற்றை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுகண்காணித்து வருகிறது.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்