முகமது நபி குறித்து அவதூறு கல்யாணராமன் மீதும் மேலும் ஒரு வழக்கு :மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸார் நடவடிக்கை
முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் மீது 295 A-மதங்களை மையப்படுத்தி குற்றத்தில் ஈடுபடுதல், 505(1), (b), (c) – பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.கவை சேர்ந்த கல்யாணராமன், நபிகள் நாயகத்தை பற்றியும், அவரது குடும்பத்தினரையும் அவதூறாக பேசினார். இதனையடுத்து நபிகள் நாயகத்தை பற்றி பேசிய கல்யாணராமனை உடனடியாக கைது செய்திட வேண்டும், என இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து கடந்த 1-ஆம் தேதி முகமது நபி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து கோவை அவினாசி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தநிலையில் வெல்ஃபேர் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முகமது கவுஸ் ”சமீபத்தில் கல்யாணராமன், முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சமூக அமைதியை கெடுக்கும் உள்நோக்கத்தோடு கல்யாணராமன் செயல்பட்டு வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கடந்த 1-ம்தேதி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.இந்தப் புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கல்யாணராமன் நபிகள் நாயகம் குறித்து விடியோவில் அவதூறாக பேசியிருப்பதும், அது சமூக ஊடகங்களில் பரவி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து கல்யாணராமன் மீது கலகம் செய்ய தூண்டுதல், பொதுஅமைதிக்கும் பங்கம் விளைவித்தல், மிரட்டல் விடுத்தல், அவமதித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இணைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ஏற்கெனவே கோயம்புத்தூா் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆா்ப்பாட்டத்தில், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கல்யாணராமன் கைது செய்யப்பட்டு, சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்