சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு...
கொரோனா வைரஸ் கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் ஹூஹான் மாகாணத்தில் இருந்து உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இந்த வைரஸால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் இருந்தது. முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என கொரோனா வைரஸ் இந்தியாவையும் ஆட்டிப்படைத்தது.
இந்நிலையில் உலகின் பெரும்பாலான நாடுகள் மறந்துவிட்ட கொரோனா தொற்று தற்போது சிங்கப்பூர், ஹாங்காங்கில் அதிவேகமாக பரவி வருகிறது. அண்மைக்காலமாக பதிவாகி வரும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இதை உறுதி செய்கிறது.
ஹாங்காங் நகரின் சுகாதார மைய தொற்று நோய் பிரிவின் தலைவர் ஆல்பர் ஆவ், இது குறித்து பேசுகையில், அந்த நகரில் இப்போது கொரோனாவின் செயல்பாடு அதிகமாக இருப்பதாக கூறினார். இந்த இடத்தில் கடந்த ஓராண்டில் இல்லாத அளவிற்கு அதிகரித்திருப்பதாகவும், அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 28 சதவீதம் கொரோனா தொற்றுகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதேபோல தாய்லாந்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
பாதுகாப்பு வழிமுறைகள்..
அடிக்கடி சோப் அல்லது சானிடைஸர் உபயோகித்து கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
வாயையும், மூக்கையும் மூடும் அளவிற்கு மாஸ்க் உபயோகிக்க வேண்டும்.
தும்மும் போதும், இரும்மும் போதும், வாயை கை முட்டியால் மூட வேண்டும்.மாஸ்கை அப்புறப்படுத்தும் போதும் அதை புதிதாக பயன்படுத்தும் போதும் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
பிறரிடம் இருந்து 3 அடி தள்ளியே இருக்கவும். குறிப்பாக உடல் நிலை சரியில்லாதவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும்.
அதிகம் மக்கள் கூடும் இடங்களை தவிர்க்கவும்.
Tags: கொரானா செய்திகள்