கலைமகள் சபா உறுப்பினர்களுக்கு முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற ஆன்லைனில் பதிவு செய்ய தமிழக அரசு கோரிக்கை
கலைமகள் சபா உறுப்பினர்களுக்கு அவர்கள் முதலீடு செய்த பணம் திரும்ப வழங்குதல் இணையதளத்தில் பதிவு செய்யக் கோரிக்கை
கலைமகள் சபா தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் 1975ன் கீழ் நாமக்கல் மாவட்டம். குமாரபாளையம், புது பள்ளிபாளையம் தெரு என்ற இடத்தில் 16/1984 என்ற எண்ணாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி சங்கத்தில் சுமார் 6,50,000 உறுப்பினர்கள் சாந்தாதாரர்களாக பதிவு செய்து உள்ளனர்.
கலைமகள் சபா உறுப்பினர்கள் பாதுகாப்பு சங்கம் (பதிவு எண்.008/2003) என்ற சங்கத்தினர்களால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு W.P.No.43650/2006ல் 01.11.2021 தேதிய தீர்ப்பாணையில் சங்க உறுப்பினர்களுக்கு அவர்கள் முதலீடு செய்த தொகை வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திட ஆணையிடப்பட்டது. மேற்படி தீர்ப்பிற்கிணங்க 20.06.2024 முதல் பதிவுத்துறை தலைவர் அவர்கள் இச்சங்கத்தின் தனி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பதிவுத்துறை தலைவர் தனி அலுவலராக நியமனம் செய்த பிறகு சங்கத்தின் செயல்பாடுகளை துரிதப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கலைமகள் சபா சங்கத்தின் மூலமாக வாங்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு அந்த சொத்துக்களின் ஆவணங்கள் அனைத்தும் ஒளிவருடல் (Scan) செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும் சங்கத்தின் சார்பாக வளங்கப்பட்ட சொத்துக்களில் இதுவரை பட்டா மாறுதல் செய்யாமல் இருந்த இனங்களுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகள் பெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கலைமகள் சபா பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கலைமகள் சபா உறுப்பினர்களின் பெயர்கள். உறுப்பினர் எண். அவர்கள் செலுத்திய சந்தா தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 6,50,000 உறுப்பினர்களுடைய விவரங்கள் கணினி மயமாக்கப்பட்டு அதற்காக தனியாக ஒரு மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.
கலைமகள் சபா உறுப்பினர்கள் அனைவரும் அவர்கள் செலுத்திய சந்தா தொகை திரும்ப பெரும் வகையில் அவர்கள் (https://kalaimagalsabha.in) என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளலாம். அவர்கள் பதிவு செய்தவுடன் அதை உறுதி செய்யும் விதமாக ஒரு குறுஞ்செய்தி (SMS) பெறப்படும். மேலும் அவர்களுடைய வங்கி கணக்கினை மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த தகவல்கள் அனைத்தும் கலைமகள் சபா அலுவலகத்தில் பராமரிக்கப்படுகின்ற பதிவேடுகளுடன் ஒப்பிட்டு பார்த்து தகவல்கள் சரிபார்க்கப்பட்டு செலுத்திய தொகை வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படும்.
இதற்கென்று தனியாக ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கலைமகள் சபா உறுப்பினராக பதிவு செய்து அவர்கள் செலுத்திய தொகையை எதிர்பார்க்கும் அனைவருக்கும் அவர்கள் செலுத்திய தொகை முழுவதும் திருப்பி வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கலைமகள் சபாவினால் வாங்கிய சொத்துக்கள் அனைத்தும் அரசு (https://tntenders.gov.in) இணையதளம் மூலம் ஏலம் விட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான பணிகளும் தனியாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளையும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகின்றது.
எனவே கலைமகள் சபா உறுப்பினர்கள் அனைவரும் (https://kalaimagalsabhain) என்ற இணையதளத்தில் பதிவு செய்து அவர்கள் செலுத்திய பணம் அனைத்தையும் திரும்ப பெறுவதற்கு தமிழ்நாடு அரசு பத்திர பதிவுத்துறை தலைவர் மற்றும் தனி அலுவலர் கலைமகள் சபா திருதினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்