ஊட்டியில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்
ஊட்டியில் இந்த ஆண்டிற்கான கோடை விழாவில், 200 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக மே 13 முதல் 30 ஆம் தேதி வரை ஹெலிடூரிசம் என்ற பெயரில் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடைபெற உள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த திட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை அண்ணா நகரை சேர்ந்த பேராசிரியர் டி.முருகவேல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், மலைப் பகுதிகளில் சுற்றுலா நோக்குடன் ஹெலிகாப்டர்களை பறக்கவிடுவது மிகவும் ஆபத்தானது எனவும், மலைபகுதிகளில் ஏற்படும் சிறிதளவு சத்தம் வனப்பகுதிக்குள் அதிக ஒலி அலைகளை ஏற்படுத்தும் என்பதால் வன விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் 2021ஆம் ஆண்டு மேகமூட்டத்தால் நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் நாட்டின் பாதுகாப்புப் படைத் தலைவர் பிபின் ராவத் உள்ளிட்டோர் பலியானார்கள் எனவே ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின்போது ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதித்தனர். மேலும் அக்கறையற்ற முறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களால் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்பட கூடாது என கருத்து தெரிவித்தனர். அதிக ஒலிகளால் விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும் என்பதால் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags: தமிழக செய்திகள்