Breaking News

விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

சென்னை மாநகராட்சியில் வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திட்ட அனுமதியில் குறிப்பிட்டவாறு அளவு, விவரக் குறிப்பின் அடிப்படையில் கட்டடங்களை கட்ட வேண்டும். மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிட  விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது.



இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில்,

 "சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 ஆயிரம் சதுரஅடி வரையிலான கட்டிட அனுமதியானது, தொடர்புடைய மண்டல அலுவலகங்களின் செயற்பொறியாளர்கள் மூலமாகவும், 5001 சதுரஅடி முதல் 10 ஆயிரம் சதுரஅடி வரை, ரிப்பன் கட்டிட தலைமையிடத்தில் உள்ள நகரமைப்பு பிரிவு மூலமாகவும் அளிக்கப்படுகிறது

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி பெறுபவர்கள் கட்டிட மற்றும் திட்ட அனுமதியில் குறிப்பிட்டுள்ளவாறு அளவு மற்றும் விவரக்குறிப்பின் அடிப்படையில்தான் கட்டிடங்களைக் கட்ட வேண்டும். அனுமதியில் குறிப்பிடப்படாத, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் கண்டறியப்பட்டால், கட்டிட உரிமையாளர்களுக்கு குறிப்பாணை வழங்கப்படும். மேலும், தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் தொடர்புடைய கட்டிடத்தை மூடி சீல் வைக்க குறிப்பாணை வழங்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்கு பிறகு மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்படும்.

சென்னையில் தற்போது விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்த விவரங்கள், தொடர்புடைய உதவி பொறியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, ராயபுரம் மண்டலத்தில் கடந்த 17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் 125 பேருக்கு இடத்தைக் காலிசெய்ய குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் 99 கட்டிடங்கள் பூட்டி சீல் வைக்க குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 11 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இதுபோன்று விதிமீறல் கட்டிடங்கள் நாள்தோறும் மாநகராட்சி அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

எனவே, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட திட்ட வரைபடத்தின்படி கட்டிடங்களை கட்ட வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களை மூடி சீல் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback