சேலம் அருகே மருத்துவ மாணவி வர்ஷினி மர்ம மரணத்தில் நிகழ்ந்தது என்ன? முழு விபரம்!
சேலம் அருகே சித்தர்கோயில் பகுதியில் உள்ள தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த மாணவி வர்ஷினி, தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த வர்ஷினி (22), சேலம் நாயக்கன்பட்டியில் தங்கி ஹோமியோபதி மருத்துவ இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று அவர் மர்மமான முறையில் தனது அறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு சென்ற அவர், சில நாட்களுக்கு முன் சேலம் திரும்பியிருந்தார். நேற்று காலை தோழி அறைக்கு வந்தபோது, படுக்கையிலேயே உயிரிழந்த நிலையில் அவர் கிடந்தார்.
வர்ஷினி அறையில் சடலமாகக் கிடக்க, கதவு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்பதைக் காட்டுகிறது. வர்ஷினி இறந்து கிடப்பதற்கு ஒரு நாள் முன்பு, அவரது தந்தை வரதராஜன் அந்த அறைக்கு வந்து சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது.
தகவலறிந்து வந்த இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தினர். 22 வயதான வர்ஷினி, நெல்லையைச் சேர்ந்த 40 வயது சித்தா மருத்துவர் (2 குழந்தைகளின் தந்தை) ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதனை அவரது தந்தை வரதராஜன் கடுமையாக எதிர்த்துள்ளார்.
இதனால் வீட்டில் தொடர்ந்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்துக்கு முந்தைய இரவு தந்தை மகளை சந்தித்து பேசிவிட்டு சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அறையின் கதவு வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்ததும், கழுத்தில் லேசான காயம் இருந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஷம் கொடுத்து அல்லது தலையணையால் மூச்சுத்திணறடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
தலைமறைவாக உள்ள தந்தை வரதராஜன் கிடைத்தால் தான் முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவியின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மாணவியின் தந்தை வரதராஜன் தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் நெல்லை வீட்டிற்கும் செல்லவில்லை. அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் நெல்லை விரைந்துள்ளனர்.வர்ஷினியின் உடல் இன்று சேலம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் முடிவிலேயே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்.
Tags: தமிழக செய்திகள்