Breaking News

வாரிசு சான்றிதழ் பெற புதிய வழிகாட்டுதல்கள் முழு விவரம்...

அட்மின் மீடியா
0

 சட்டப்படியான வாரிசு சான்றிதழ் பெறுவதற்கும், அதை வழங்குவதற்கும் புதிய வழிகாட்டுதல்களை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய் துறை வெளியிட்டுள்ளது.


வாரிசுதாரர் சான்று வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இறந்தவர் வசித்த பகுதியில் உள்ள தாசில்தாரிடம், வாரிசு சான்றிதழ் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவேளை, அவர் அந்த முகவரியில் 6 மாதத்துக்கும் குறைவாக வசித்திருந்தால், ஓராண்டுக்கு அதிகமாக வசித்த பகுதியின் தாசில்தாரிடம் இருந்து அறிக்கை பெற வேண்டும்.

வாரிசுதாரர் சான்றிதழை, இறந்தவரின் தந்தை, இறந்தவரின் தாய், இறந்தவரின் வாரிசு, இறந்தவரின் மகன்கள் அல்லது மகள்கள் ஆகியோருக்கு வழங்கலாம். 

இறந்தவர் திருமணமாகாதவராக இருந்தால், அவரது தாய், தந்தை, சகோதரர், சகோதரி ஆகியோருக்கு வாரிசு சான்றிதழ் வழங்கப்படும்.

திருமணமாகாதவர் இறக்கும் போது, வாரிசு சான்றிதழ் பெற சில முக்கிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் அல்லது அரசிடமிருந்து பெறப்பட்ட தாமதமான இறப்புச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஓய்வூதிய கணக்கு உத்தரவு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இறந்தவர் திருமணமானவர் என்றால், திருமண பதிவுச் சான்றிதழ், கடவுச்சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஜாதிச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர், சிறாராக இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். இறந்தவரின் சகோதரர் அல்லது சகோதரிகளை காப்பாளராகக் கொண்டு விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

தத்தெடுத்துக் கொண்ட குழந்தைக்கு வாரிசு சான்றிதழ் வழங்கும் போது, சட்டபூர்வமான முறையில் தத்தெடுப்பு நடந்துள்ளதா என்பதை வட்டாட்சியர்கள் ஆய்வு செய்திட வேண்டும். 

விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியே விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பி வைக்கப்படும். 

அவர் ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் வட்டாட்சியருக்கு அறிக்கையை அனுப்பி வைப்பார். அதிலிருந்து அடுத்த ஒரு வாரத்துக்குள் வாரிசு சான்றிதழை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தவறான தகவல்கள் அளிக்கப்பட்டதை கண்டறிந்தால் சான்றிதழை ரத்து செய்வதற்கும், அதை வழங்கிய அதிகாரிக்கு அதிகாரம் உண்டு

சட்டப்படியான வாரிசு சான்றிதழில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், தாசில்தாரின் உத்தரவை எதிர்த்து வருவாய் கோட்டாட்சியரிடம் ஓராண்டுக்குள் முறையிட வேண்டும். அதற்கு மேல் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் முறையிடலாம்.






Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback